பாலாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு

பாலாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் கோகிலா (18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அக்கா மதுப்பிரியா (22), புதுப்பேட்டை கிழக்கு மேடு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன், மற்றும் மனைவி சுபஸ்ரீ (22), அவரது தம்பி தம்பிதுரை (20), மற்றும் ஜெயகாந்தன் நண்பர் பிரவீன் ஆகிய 6 பேர் இரு சக்கர வாகனங்களில் நாட்றம்பள்ளி தாலுகா, தகரகுப்பம் கிராமம் அருகே உள்ள சேத்துமடுவு பாலாற்றில் குளிக்கச் சென்றனர்.

அங்கு பாலாற்றில் அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கோகிலா நீரில் மூழ்கி மாயமானார். இதனைப் பார்த்து மதுப்பிரியா உள்ளிட்டோர் கத்திக் கூச்சலிட்டனர். ஆனால், அதற்குள் சுபஸ்ரீயும், நீரில் மூழ்கி மாயமானார். அதனைப் பார்த்த மற்றவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவி கோகிலா மற்றும் ஜெயகாந்தன் மனைவி சுபஸ்ரீ ஆகிய இருவரையும் தேடித் தொடங்கினர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டுள்ளனர்.

அதன் பின் இருவரையும் உடனடியாக இரு சக்கர வாகனம் மூலமாக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு கோகிலா மற்றும் சுபஸ்ரீ ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற திம்மாம்பேட்டை காவல் துறையினர், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குளிக்கச் சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு திம்மாம்பேட்டை காவல் துறையினர் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 6 பேர் பாலாற்றில் குளிக்க சென்ற போது இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.