‘எங்கள் திட்டங்களின் காப்பி தான் பழனிசாமி வெளியிட்ட அதிமுக வாக்குறுதிகள்’ - திமுக ரியாக்ஷன்
drb-Raja- criticizes- Edappadi Palaniswami's- election announcement
“கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையே காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது” என திமுக அரசின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு ‘டூப்’ போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானபோது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை, எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி.
ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார். இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக.
அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதில், மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம், 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும், அம்மா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மனை வாங்கி, அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும், 5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும் ஆகிய 5 திட்டங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.