சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புல்லுமேடு காட்டு பாதை வழியாக நடந்து சென்ற இரண்டு பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சபரிமலை சீசனில் மட்டும் இதுவரை 11 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், கரூர் முக்கனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலாஜி (43), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா அம்மன்சத்திரத்தை சேர்ந்த ராஜ்குமார் (52) ஆகிய இருவரும் புல்லுமேடு கானக பாதை வழியாக சபரிமலை ஐயப்பன் கோயிலை நோக்கி நடைபயணமாக சென்றனர்.

அப்போது நீண்ட தூரம் மலையில் ஏறி சென்றதால், அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதி வழியிலேயே அவர்கள் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த சக ஐயப்ப பக்தர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இவர்களின் உடல்கள் வண்டிப்பெரியார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்து கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள் - என்ன செய்வது?

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு சபரிமலை சீசனில் மட்டும் இதுவரை 11 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனனர். மலைப் பாதையில் நீண்டதூரம் இடைவிடாமல் நடந்து செல்வதும் இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஓய்வெடுத்து செல்லுமாறும், நீர் ஆகாரங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே போல, எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் திடீரென மலை ஏறுவதால் இதயம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, மலை ஏறுவதற்கு முன்பாக சுமார் ஒரு மாதமாவது தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சியை செய்யுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.