‘என் படத்தைப் போடவேண்டாம்..!’ - புதுவை ஆளுநரின் முடிவுக்கு புது அர்த்தம்

‘என் படத்தைப் போடவேண்டாம்..!’ - புதுவை ஆளுநரின் முடிவுக்கு புது அர்த்தம்

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், “என்னுடைய படத்தைப் போடவேண்டாம்” என்று சொல்லி புதுமைப் புரட்சி செய்திருக்கிறார்.

யூனியன் பிரதேசமாக இருப்பதால் புதுச்சேரி அமைச்சரவை எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவது மிக அவசியம். அதனால் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பதாகைகளில் முதல்வர் படத்துடன் துணைநிலை ஆளுநரின் படமும் கட்டாயம் இடம்பெறும்.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகம் தொடங்கியது. இலவச அரிசி வழங்குவதற்கான பைகளில் முதல்வர் ரங்கசாமி படத்துடன் வழக்கம் போல் ஆளுநர் கைலாஷ்நாதன் படமும் இடம் பெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி பரிசாக ரேஷனில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி அண்மையில் தொடங்கி வைத்தார். இதற்காக தயாராகி வந்துள்ள பைகளில் ஆளுநர் கைலாஷ்நாதனின் படம் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி மற்றும் பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு உள்ளர்த்தம் கற்பிக்கும் சிலர், “அரசின் சில கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் முதல்வர் ரங்கசாமிக்கும் ஆளுநர் கைலாஷ்நாதனுக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் ஆளுநரின் படத்தைப் போடாமல் பிரதமரின் படத்தைப் போட்டிருக்கிறார்கள். ஏன் பிரதமர் படத்தைப் போட்டீர்கள் என்று ஆளுநரால் கேள்வி கேட்கவும் முடியாதே” என்கிறார்கள்.

அதிகாரிகள் தரப்பில் இதுபற்றி விசாரித்தபோது, "புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பல திட்டங்கள் மத்திய அரசு நிதி உதவியுடன் தான் செயல்படுத்தப்படுகிறது. அதனால் தனது படத்துக்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம்பெறுவதுதான் சரியாக இருக்கும் என கோப்பில் ஆளுநர் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகவே, தீபாவளிக்கு இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கும் பைகளில் ஆளுநருக்குப் பதிலாக பிரதமர் படத்தை அச்சிட்டுவிட்டோம்” என்கிறார்கள்.

ஆனால் புதுச்சேரி அரசியல் வட்டாரத்திலோ, “எல்லாம் காரண காரியத்துடன் தான் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் முதல்வர் படத்துடன் பிரதமர் மோடியின் படத்தையும் சேர்த்து அச்சிட்ட பைகளில் தீபாவளிக்கான மளிகைத் தொகுப்பைக் கொடுத்தால் வீட்டுக்கு வீடு அந்தப் பைகள் சென்றடையும் போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்பதே இவர்களின் திட்டம்” என்கிறார்கள்.