குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; முதன்மை தேர்வு முறையில் மாற்றம்

குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது; முதன்மை தேர்வு முறையில் மாற்றம்

மொத்தம் 4.18 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. மேலும் குரூப்-2ஏ முதன்மை தேர்வு (தாள் -2) கணினி வழியில் இல்லாமல் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகள், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகள் என மொத்தம் 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படும் என்று ஜூலை 15-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. 5,53,634 தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்தத் தேர்வை எழுத குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கு முதன்மைத் தேர்வில் தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு(2026) பிப்ரவரி 8ம் தேதி காலையிலும், அதே நாள் குரூப்-2ஏ பதவிகளுக்கான தாள்-2(பொதுப்பாடம்) தேர்வு பிற்பகலிலும் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளுக்கான தாள்-2 தேர்வு (பொதுப்பாடம்) பிப்ரவரி 22ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கு இன்று முதல் (டிச.23) டிசம்பர் 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

மேலும், தொகுதி IIA பணிகளை உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) தாள்-II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையில் (Notification) தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக தொகுதி IIA பணிகளுக்கானு முதன்மைத் தேர்வு (தாள் 2) OMR முறையில் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.