சென்னையில் 3 பேர் கொடூர கொலை! அதிர்ச்சித் தகவல்

சென்னையில் 3 பேர் கொடூர கொலை! அதிர்ச்சித் தகவல்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டதுடன், அவரின் மனைவி, குழந்தையின் சடலங்கள் கால்வாயில் வீசப்பட்ட கொடூர சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. பெருங்குடியையே பதற வைத்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் ஓரிடத்தில் ரத்தக்கறையுடன் சாக்குமூட்டை இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அதுகுறித்து கடந்த 26-ம் தேதி காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அங்கு வந்து அந்த மூட்டையை சோதனையிட்டபோது அதற்குள் ஆண் சடலம் இருந்தது தெரிய வந்தது. அந்த உடலை போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சாக்குமூட்டையை தூக்கி வீசி சென்றது தெரிந்தது. அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் செல்ஃபோன் எண் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்துடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும், இவர் தனது மனைவியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும், அதற்கு செக்யூரிட்டி பணி வழங்கும் நிறுவனம் தற்போது வேலை காலி இல்லை; தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தததும் விசாரணையில் தெரிந்தது. இதன் பிறகு கவுரவ்குமார் தரமணியில் இயங்கிவரும் பாலிடெக்னிக்கில் காவலாளியாக சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிந்தது.

எனவே கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களின் குழந்தையையும் கொன்றுவிட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. அதனடிப்படையில் கவுரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையின் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். இதற்கிடையில் மத்திய கைலாஷ் பகுதியில் ஓடும் கால்வாயில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக அடையாறு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கவுரவ் குமார் மனைவியின் உடலை தேடிவரும் தனிப்படை போலீசார், பெருங்குடி குப்பைக் கிடங்கை தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.