தருமபுரியில் பயங்கரம்: வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

தருமபுரியில் பயங்கரம்: வாகனங்கள் மீது லாரி மோதி 4 பேர் பலி

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று முன்னே சென்ற வாகனங்களை இடித்துத் தள்ளியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள அபாயகரமான சாலைகளில் தொப்பூர் கணவாய் பகுதி முதலிடத்தில் உள்ளது. சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் சேலம் - தருமபுரி இடையிலான மலைப்பகுதியில் தொப்பூர் கணவாய் உள்ளது. இந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் எச்சரித்து வருகின்றன. நெடுஞ்சாலைத் துறையும் பல இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளன.

இந்நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில், இன்று காலை சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, முன்னால் சென்ற லாரி, இரு சக்கர வாகனம், ஆம்னி வேன், கார் என தொடர்ச்சியாக வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள், தம்மணம்பட்டியைச் சேர்ந்த அருணகிரி, மாதேமங்கலத்தை சேர்ந்த கலையரசி, சங்கிரியை சேர்ந்த முனியப்பன் மற்றும் தினேஷ் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த 3 பேரை காவல் துறையினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த இடம் தேசிய நெடுஞ்சாலை என்பதால், பின்னால் வந்த வாகனங்கள் போக வழியின்றி தவித்தன. இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

தொடரும் விபத்துகள்

இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2020 டிசம்பர் மாதம் இதே போல், அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநில போக்குவரத்துத் துறை நடத்திய ஆய்வில், 2012 முதல் 2021 காலகட்டத்தில் 558 விபத்துகள் தொப்பூர் கணவாய் பகுதியில் பதிவாகியுள்ளன. இதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 684 பேர் காயமடைந்ததாக தரவுகள் உறுதி செய்துள்ளன.

2019 முதல் 2023 வரை நடந்த தொப்பூர் கணவாய் விபத்துகளில் 77 பேர் உயிரிந்ததாக மாநில போக்குவரத்து துறை தரவுகள் குறிப்பிடுகின்றன.