மூன்றாம்தர பேச்சாளராக மோடி மாறியுள்ளார்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மூன்றாம்தர பேச்சாளரை போல பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வைகோ, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடி நல்ல பேச்சாளர். அவருக்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசமாட்டார், ஹிந்தியில் மட்டுமே பேசுவார். மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் மோடி தரம் தாழ்ந்து பேசியுள்ளார். மூன்றாம்தர பேச்சாளராக மாறி அவர் பேசியுள்ளார்.
ஒன்றிய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்குகிறது. ஆனால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி வழங்காமல் ஓரவஞ்சனை செய்கிறது. ஆனால் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதாக மோடி பேசியுள்ளார். அது பச்சைப் பொய். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக மரபை பின்பற்றிதான் செயல்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை; எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது.
நான் அரசியலில் 60 ஆண்டுகளாக உள்ளேன். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என மோடி பேசுவது எதுவும் நடக்காது. அதிமுக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசுவதும் நடக்காது. அவர்கள் தேர்தலில் தோல்வி அடைவார்கள். ஆளும் திமுக அரசு கடந்த நான்காண்டு ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துவிட்டது. இப்போதும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
எனவே, சனாதானம் ஒருகாலத்திலும் தமிழகத்தில் கால் வைக்க முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி வலுவாக உள்ளது" என வைகோ கூறினார்.
முன்னதாக, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தனக்கு பத்து தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டுள்ளாராரே என்ற கேள்விக்கு, "அது அவரின் விருப்பம். அவர் கேட்பதையே நானும் கேட்க வேண்டியதில்லை" என வைகோ பதிலளித்தார்.