2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு சென்ற தனியார் பேருந்து, துரைசாமிபுரம் பகுதியில் எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 6 பேர் உயிரிழந்தனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார், விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் பேருந்தை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ள நபர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.