Spartacus: ரோமின் அடிவயிற்றில் தீ மூட்டியவன் | சினிமாவும் அரசியலும் 5
அதிகமான புகழ்மொழிகளுக்குச் சொந்தமான, ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடிவயிற்றில் ஓர் அடிமை, தீ மூட்டினார் என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும். ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை ஒரு சாதாரண அடிமை அசைத்துப் பார்த்தார் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா! அந்த அடிமையின் பெயர் ஸ்பார்ட்டகஸ்.
அந்த ஸ்பார்ட்டகஸின் அற்புதமான வரலாற்றை 1951இல் நாவலாக எழுதினார் ஹோவர்ட் ஃபாஸ்ட். தொடர்ந்து 1960இல் டால்டன் ட்ரம்போ திரைக்கதை எழுத, ஸ்டான்லி குப்ரிக் திரைப்படமாக இயக்கினார். 65 வருடங்கள் கடந்துவிட்டன, ஆனாலும்கூட இன்றும் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம் உலகத்தின் ஒவ்வொரு மனிதருக்கும் உந்துசக்தியாக இருந்து கொண்டிருக்கிறது. சுதந்திரத்தை விரும்புகிற ஒவ்வொரு மனிதராலும் நேசிக்கப்படும் படைப்பாக இருக்கிறது ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்.
பெருமையின் உச்சத்திலும், வலிமையின் உச்சத்திலும் இருந்த ரோமக் குடியரசு ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நோயின் பெயர் மனித அடிமைத்தனம். அந்த அடிமைத்தனத்தை எதிர்த்து, அடிமைகளை ஒன்றுதிரட்டி புரட்சி செய்த கதைதான் ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்.’
சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காகச் சகல திசைகளிலும் இருந்து அடிமைகள் அழைத்து வரப்பட்டார்கள். லிபியாவின் சுரங்கத்தில் உழைத்துக் கொண்டிருந்த ஸ்பார்ட்டகஸும் அடிமைகளோடு அடிமையாக ரோமுக்கு அழைத்துவரப்பட்டு, மன்னர்களையும் உயர்குடிகளையும் சண்டைசெய்து மகிழ்விக்கும் கிளாடியேட்டர் பள்ளியில் பயிற்சிக்குச் சேர்க்கப்பட்டார்.
அடிமைகளுக்குக் கோபம் வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், வந்தது. அங்கிருந்து தப்பிச் சென்ற அடிமைகள், சுற்றிலும் பரவிக்கிடக்கும் அடிமைகளை விடுவித்து ஸ்பார்ட்டகஸ் தலைமையில் ராணுவத்தை அமைக்கிறார்கள். வரினியாவும் தப்பித்து வர, ஸ்பார்ட்டகஸும் அவரும் சேர்ந்துகொள்கிறார்கள். சாம்ராஜ்ஜியத்தைக் குலைநடுங்கச் செய்த அடிமைகள், சுதந்திரக் கனவுகளை விரிவுபடுத்திக் கொண்டு உறுதியாகப் புரட்சி செய்கிறார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து இந்தக் கட்டுரைக்காகப் படத்தைப் பார்த்தபோது, ஸ்பார்ட்டகஸை மட்டுமல்ல மானுட வரலாற்றையே உலுக்கிய அடிமைகளின் புரட்சிக்குப் பின்னால் காதல் நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆம், வரினியா இன்னொருவரிடம் விற்கப்பட்டு அழைத்துச் செல்வதைப் பார்த்தவுடன் ஸ்பார்ட்டகஸ் திருப்பி அடிக்கத் தொடங்குகிறார். அடிமைகளை ஒன்றிணைத்து போர் செய்து கொண்டிருப்பதற்கு நடுவில், கடைசி யுத்தத்தின் முடிவை உணர்ந்தவராக, கர்ப்பிணியாக இருக்கும் வரினியாவிடம், ’என் மகனைக் கவனித்துக்கொள் வரினியா. நான் யார்? நாம் என்ன கனவுகள் கண்டோம் என்பதைச் சொல். உண்மையைச் சொல். பொய்களைச் சொல்ல பலர் இருக்கிறாரக்ள்’ என்று உணர்ச்சிகரமாகச் சொல்வார் ஸ்பார்ட்டகஸ்.
கடைசிக் காட்சியில் உயிருக்குப் போராடியபடி சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஸ்பாட்டகஸை நோக்கிக் குழந்தையோடு வரும் வரினியா, குழந்தையை அவரிடம் தூக்கிக் காட்டிவிட்டு, ’இதோ உங்கள் மகன், ஸ்பார்ட்டகஸ். அவன் சுதந்திரமானவன். சுதந்திரம் பெற்றுவிட்டான். அவன் உங்களை நினைவில் வைத்துக்கொள்வான். ஏனெனில், அவனுடைய தந்தை யாரென்றும், அவர் கண்ட கனவுகள் என்னவென்றும் நான் அவனுக்குச் சொல்வேன். அன்பே! தயவு செய்து இறந்துவிடுங்கள்’ என்று வரினியா கெஞ்சும் காட்சி இதயத்தில் பேரிடியை இறக்கிவிடும்.