டி20 WC இந்திய அணியில் நீக்கம் ஏன்? சுப்மன் கில் பதில்!
என்னுடைய தலையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ, அதனை யாராலும் மாற்ற முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகின்றனர்.
இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை .அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும், இஷான் கிஷன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை. தொடர்ச்சியாக அவர் இரு டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படாதது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையொட்டி இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சுப்மன் கில், நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
எப்போது கடந்த விஷயங்களை பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கும் பழக்கம் இல்லை. வாழ்க்கையின் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைப்பேன். கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் நான் அறிமுகமானேன். அதனை என்னால் மறக்க முடியாது. இந்திய அணிக்காக விளையாடும் போது, ஒவ்வொரு வடிவமும் சவால் நிறைந்தது தான். ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2011ல் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் வெல்ல முடியவில்லை.
ஒருநாள் வடிவம் எளிதானது என்று சொல்லிவிடலாம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவமும் எளிதாக இருக்காது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம். மனதளவில் தயாராக வேண்டியதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.