‘பாஜகவின் தலையாட்டி பொம்மையே தேர்தல் ஆணையம்’ - செல்வப்பெருந்தகை விமர்சனம்

‘பாஜகவின் தலையாட்டி பொம்மையே தேர்தல் ஆணையம்’ - செல்வப்பெருந்தகை விமர்சனம்

பாஜக சொல்வதை கேட்கும் தலையாட்டி பொம்மையாக தேர்தல் ஆணையம் உள்ளது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நவம்பர் 4 ஆம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயலை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் திராவிடர் கழக துணை தலைவர் கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் எதிராக கோஷத்தை எழுப்பினர்.

அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, “நாங்கள் SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம் என்பதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றம், பத்திரிக்கை மன்றம் என அனைத்து இடங்களிலும் எடுத்துரைத்துள்ளார். உலக நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, 'டிஜிட்டல் இந்தியா' என்று பெருமை பேசுகிறார். ஆனால், ராகுல் காந்தி கேட்கும் தரவுகள் எதுவும் வருவதில்லை.

அப்படி என்ன கேட்டோம், ஹரியானாவில் புதிய வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்? மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் எப்படி 90 லட்சம் வாக்காளர்களை சேர்த்தீர்கள்? என்று தான் கேட்கிறோம். அதற்கு தரவுகள் இல்லை என்பது வெட்கக்கேடு. பாஜக சொல்வதை மட்டுமே கேட்கும் தலையாட்டி பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. ஆகையால், SIR மூலம் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக உள்ளார்.

உலகத்தில் வாக்குச்சீட்டு முறை வருவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் குடவோலை முறை இருந்ததற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. அப்படிப்பட்ட தமிழகத்தில் எஸ்ஐஆரையும், RSS சித்தாந்தத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதற்காக, SIR வேண்டாம் என்று புறந்தல்லவில்லை, தேர்தல் வரவுள்ளதால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். அதனைத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். மேலும், பருவமழை தொடங்கியுள்ள நேரத்தில் மிகவும் குறுகிய காலமே உள்ளதால், பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். அதனால் தேர்தல் முடிந்த பிறகு SIR பணியை மேற்கொள்ளவும்” எனத் தெரிவித்தார்.