போதைப்பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

போதைப்பொருள் வழக்கு; நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

போதைப்பொருள் பறிமுதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் நேரில் ஆஜராகாத நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி இன்று 11ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அதன் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். மேலும் கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலங்களை பெற்று அடுத்தகட்ட விசாரணைக்கு அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு (ANIU) சிறப்புப் படையினர் கடந்த ஜூன் 18 ஆம் தேதி சென்னையை சேர்ந்த பிரதீப் குமாருக்கு போதைப் பொருள் வழங்கியதாகக் கூறப்படும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரைக் கைது செய்தனர். இதன் பின்னர், சென்னை போலீசார் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் பிறகு வழக்கு விசாரணையில் பல்வேறு நபர்கள் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ​இந்த வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் பிரசாந்த், நடிகர் ஸ்ரீகாந்த், ஜவஹர், நடிகர் கிருஷ்ணா மற்றும் பயாஸ் அகமது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை சென்னை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

பின்னர் விசாரணையில் மொத்தம் 11.5 கிராம் கொகைன், 10.3 கிராம் மெத்தப்பட்டமைன், 2.75 கிராம் MDMA, 2.4 கிராம் OG கஞ்சா மற்றும் 30 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்த போதை பொருள் வழக்கு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கூறி விசாரணையை ஆரம்பித்தது.

மேலும் ​கைதானவர்களிடம் இருந்து ஜூன் 18 அன்று கைப்பற்றப்பட்ட 40000 ரூபாய், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த பணம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை நடத்தி வருகிறது. இந்த போதைப் பொருள் வழக்கில் வழக்கில் தொடர்புடைய நபர்கள் ஹவாலா பரிவர்த்தனை மூலம் போதை பொருள் வாங்கி இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பிரதீப், ஜவஹர் மற்றும் பிரசாந்த் ஆகியோர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை ​சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று புழல் சிறையில் உள்ள பிரசாந்த், ஜவஹர் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரிடம் கடந்த சில தினங்களுக்கு விசாரணை நடத்தியது.

அடுத்த கட்டமாக நடிகர் ஸ்ரீகாந்திடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதேப் போன்று நடிகர் கிருஷ்ணா 29 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தனிப்பட்ட காரணத்தை கூறி ஆஜராகாமல் இருந்துள்ளார். மேலும் வேறொரு நாளில் ஆஜராகுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கதுறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைப் பொருள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? போதை பொருள் வாங்குவதற்காக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதா? சட்டவிரோத பண பரிமாற்றம் ஏதாவது நடைபெற்றதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.

அப்போது ஏற்கனவே அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் போது அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் தகவல்கள் தெளிவாக இல்லாததால் மீண்டும் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளதாகவும், இதனால் மீண்டும் தெளிவான ஆவணங்களுடன் நடிகர் கிருஷ்ணா மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியது.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் நேரில் ஆஜராகாத நிலையில் அவருக்கு மீண்டும் அம்மன் அனுப்ப அமலாகத்தில் அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று 11ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ஸ்ரீகாந்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.