முனம்பத்தின் 365 ஏக்கர் நிலம் வக்பு சொத்து கிடையாது: கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பால் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சி

கேரளாவின் முனம்பம் பகுதியில் உள்ள 365 ஏக்கர் நிலம். வக்பு வாரிய சொத்து கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. இந்த தீர்ப்பை முனம்பம் பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்று உள்ளனர்.
கேரளாவின் கொச்சி நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் முனம்பம் பகுதி அமைந்துள்ளது. கடற்கரை கிராமமான அங்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மீன்பிடித் தொழில், இறால் வளர்ப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டில் முனம்பம் பகுதியின் 365 ஏக்கர் நிலத்தை வக்பு சொத்தாக கேரள வக்பு வாரியம் அறிவித்தது. இந்த அறிவிப்பை கேரள அரசு நிராகரித்தது. இதுதொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. முனம்பம் பகுதியை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வக்பு வாரியத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை கேரள உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு விசாரித்து கடந்த மார்ச் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது முனம்பம் பகுதி நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள அரசு சார்பில் 2 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மதிகாரி, ஷியாம் குமார் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டில் முனம்பம் பகுதி நிலம் வக்பு வாரிய சொத்தாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் வக்பு வாரிய சட்ட விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன. கடந்த 1950-ம் ஆண்டில் சித்திக் என்பவர் முனம்பம் பகுதி நிலத்தை பருக் கல்லூரிக்கு தானமாக வழங்கி உள்ளார். இது தானப் பத்திரம் மட்டுமே. இதை வக்பு சொத்தாக கருத முடியாது.
சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முனம்பம் பகுதி நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி உள்ளது. இது நில அபகரிப்பு முயற்சி ஆகும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ஒரு நீதிபதி அமர்வு பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. முனம்பம் பகுதி நிலம் வக்பு வாரிய சொத்து கிடையாது.
முனம்பம் பகுதி நிலப் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரன் நாயர் கமிஷனை கேரள அரசு நியமித்தது. அந்த கமிஷன் செயல்பட ஒரு நீதிபதி அமர்வு ரத்து செய்தது. நீதிபதி ராமச்சந்திரன் நாயர் கமிஷன் மீண்டும் செயல்படலாம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை முனம்பம் பகுதி மக்கள் முழுமனதோடு வரவேற்று உள்ளனர். கத்தோலிக்க பாதிரியார் ஜோஷி கூறும்போது, “முனம்பம் பகுதி நிலத்தை அபகரிக்க வக்பு வாரியம் முயற்சி செய்வதாக உயர் நீதிமன்றமே குற்றம் சாட்டி உள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பால் சுமார் 600 குடும்பங்கள் நிம்மதி அடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.