திருப்பூரில் போராட்டத்தில் அவிழ்த்துவிடப்பட்ட மாடுகள்... பெரும் பரபரப்பு

திருப்பூரில் போராட்டத்தில் அவிழ்த்துவிடப்பட்ட மாடுகள்... பெரும் பரபரப்பு

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் நடுவே சிலர் மாடுகளை அவிழ்த்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடுவாய் பகுதியில் குப்பை கொட்டக்கூடாது என்று மாநகராட்சி குப்பை வாகனங்களை பொதுமக்கள் தடுத்து போராட்டம் நடத்தியபோது, போராட்டத்தில் சிலர் மாடுகளை அவிழ்த்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் பொதுமக்களில் 3 பேர் மற்றும் 4 போலீசார் காயமடைந்தனர்.

திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காளிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பூர் மாநகர போலீசார் பொதுமக்களை கைது செய்ய முயன்ற நிலையில், கூட்டத்தின் நடுவே சிலர் மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக அங்கு வாகனங்களை சிறைப்பிடித்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததில் அப்பகுதியே களேபரமானது.

இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அருண்குமார், வித்யா உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் காயமடைந்தவர்களை பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இதேபோல் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் ஜான், காவல் ஆய்வாளர் கணேசன், ஆயுதப்படை பெண் காவலர் தேன்மொழி என மூன்று போலீசார் போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காயமடைந்ததாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறை குழிகளில் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், கடும் தூர் நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தனர். குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி மக்கள் கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் கெட்டுப்போன குடிநீருடன் பாய் மற்றும் தலையணைகள் எடுத்து வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.