எஸ்ஐஆர்: மே.வங்கத்தில் 58 லட்சம் பேர் நீக்கம்; புதுச்சேரியில் 10.04% வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர்: மே.வங்கத்தில் 58 லட்சம் பேர் நீக்கம்; புதுச்சேரியில் 10.04% வாக்காளர்கள் நீக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பல்வேறு மாநிலங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி என அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்ற வந்த 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ளது.

அதன்படி மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியானது.

மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பேர் நீக்கம்

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் 58 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் பேர், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் என 58 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 58,20,898 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்ததாக 24,16,852 வாக்காளர்களும், இடம்பெயர்ந்தாக 19,88,076 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அடையாளம் காண முடியாதவர்கள் என 12,20,038 வாக்காளர்களும், 1,38,328 பெயர்கள் போலி வாக்காளர்கள் என குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். மேலும், பிற காரணங்களுக்காக 57,604 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறவித்துள்ளது.

புதுச்சேரியில் 85 ஆயிரம் பெயர்கள் நீக்கம்

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியில் இன்று வெளியான நிலையில் 85,531 வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் பணிகள் புதுச்சேரியில் நிறைவடைந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்பு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டார். அதன்படி புதுச்சேரியில் 8,51,775 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,99,771, பெண்கள் 4,51,869, மூன்றாம் பாலினத்தவர் 135 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

எஸ்ஐஆர் திருத்தம் காரணமாக 85,531 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 10.04% ஆகும். நீக்கப்பட்டவர்களில் 16,171 பேர் மரணமடைந்துவிட்டனர். 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். 22,077 பேர் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாததாலும், 322 வாக்காளர்கள் வேறு காரணத்திற்காகவும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.