மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை - தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை - தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பகலில் மழை ஓய்ந்திருந்தபோதும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடித்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் இங்குள்ள ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 167 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் நாலுமுக்கில் 165, காக்காச்சியில் 143, மாஞ்சோலையில் 132 மி.மீ. மழை பெய்திருந்தது.

மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):அம்பாசமுத்திரம்- 17.60, சேரன்மகாதேவி- 5.40, மணிமுத்தாறு- 14.20, நாங்குநேரி- 15, பாளையங்கோட்டை- 5, பாபநாசம்- 31, திருநெல்வேலி- 2.20, சேர்வலாறு அணை- 18, கன்னடியன் அணைக்கட்டு- 11, களக்காடு- 6.80, கொடுமுடியாறு அணை- 6, மூலைக்கரைப்பட்டி- 20.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 9,266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 12,480 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் 131.95 அடியாக உயர்ந்திருந்தது. இதுபோல் 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.27 அடியை எட்டியிருந்தது. அணைக்கு 4,972 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை யிலிருந்து 4,305 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து மொத்தம் 16,785 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், காட்டாற்று வெள்ளம் மற்றும் தென்காசி மாவட்டம் கடனா மற்றும் ராமநதி அணைகளில் இருந்து வரும் தண்ணீர் என நேற்று பகலில் தாமிர பரணி ஆற்றில் 32,787 கன அடி தண்ணீர் பாய்ந்தோடியது.

தொடர் வெள்ளத்தால் மணிமுத்தாறு அருவியில் நேற்று 7-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அகஸ்தியர் அருவியில் 2-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. களக்காடு தலையணையில் குளிக்க 6-வது நாளாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. திருமலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.

பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முக்கிய சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவர் மழையால் இடிந்து விழுந்தது. திருநெல்வேலி சந்திப்பில் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியை ஒட்டி அமைந்துள்ள பாரதியார் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் மழையால் இடிந்து விழுந்தது.