தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை, டெல்லியில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து சென்னை, டெல்லியில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சென்னையில் டிசம்பர் 2-ம் (நாளை) தேதியும் டெல்லியில் 4-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் 1980-ல் இயக்கம் தொடங்கி இன்று வரை 46 ஆண்டுகள் கட்சி நடத்தி வருகிறேன். கடந்த காலத்தில் சாலை வசதி, மின்சார வசதி இல்லாத நிலையில் வயல் வரப்பில் நடந்து சென்றோம். லாந்தர் விளக்கு பிடித்தும் பல கூட்டங்களில் பேசி 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று கட்சி வளர்த்து, சமூக நீதியை உயிர் மூச்சு கொள்கையாக கொண்டு மக்கள் மேம்பட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகிறேன்.

நான் தொடங்கிய பாமகவுக்கு பேராசிரியர் தீரன் தலைவராக இருந்து செயல்பட்டார். அடுத்து ஜி.கே.மணி 25 ஆண்டு காலம் தலைவராக செயல்பட்டு வந்தார். பின்னர், அன்புமணி தலைவராக விரும்பியதால் கடந்த 2022-ம் ஆண்டு மே 28-ம் தேதி பொதுக்குழுவை கூட்டி தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தேன். ஆனால் அன்புமணி சதி திட்டம் தீட்டி 2023 பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து, அவர் 2026 வரையில் பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணையம் கடிதம் கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது.

அன்புமணி என்னிடமிருந்து கட்சியை சூழ்ச்சியால் பறித்து கொண்டது, கட்சி திருட்டு செயல். தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு கொடுத்துள்ளது. இப்படி எனது கட்சியை பறித்துக்கொண்டது என் உயிரை பறித்ததாகும். 46 ஆண்டு காலம் உழைத்து போராடிய என்னிடமிருந்து பறித்து கொண்டது சொல்ல முடியாத உயிர் பறிபோன செயலால் கண்ணீர் வடிக்கிறேன். கலங்கி நிற்கிறேன். இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன். எனது கட்சி என்கைக்கு வரும் என நம்பிக்கையோடு இருக்கிறேன்.

தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக படுகொலையை கண்டித்து நீதிகேட்டு பாமக சார்பில் வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் இன்னாள், முன்னாள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். அடுத்து தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், நீதிகேட்டும் டெல்லியில் வரும் டிசம்பர் 4-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். தமிழகத்திலிருந்து பாமகவினர் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.