பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்த ரஜினிகாந்த்! புகைப்படங்கள் வைரல்!

ரஜினிகாந்த் பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டு கால திரைப் பயணத்தில் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போதும் ரஜினிகாந்த் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ திரைப்படத்தில் நடித்தார்.
மாபெரும் பட்ஜெட்டில் உருவான கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்தது. கூலி படத்தில் ரஜினிகாந்துடன் நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்தனர். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் முதல் பாகம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த நிலையில், ஜெயிலர் 2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆன்மீகத்தில் அதிகளவு ஈடுபாடு கொண்ட ரஜினிகாந்த், தனது ஓய்வு நேரங்களில் இமயமலை பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இமயமலை சென்ற ரஜினிகாந்த், இம்முறை அப்பகுதியில் அதிக மழை காரணமாக செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் ரிஷிகேஷில் ஆன்மீக பயணம் செய்தார். அங்கு செல்லும் வழியில் சாலையோரக் கடையில் உணவு அருந்தினார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து நேற்று உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்து பத்ரிநாத் - கேதர்நாத் கோயில் கமிட்டி வெளியிட்டுள்ள தகவலில், ரஜினிகாந்த் கோயிலுக்கு வந்த போது சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பத்ரி விஷால் சுவாமியை தரிசனம் செய்த ரஜினிகாந்திற்கு கோயில் கமிட்டி உறுப்பினர்கள் பிரசாதம், துளசி ஆகியவற்றை வழங்கினர். பத்ரிநாத் - கேதர்நாத் கோயில் கமிட்டி குளிர் காலத்திற்கு கோயில் மூடப்படும் தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 23ஆம் தேதி கேதர்நாத் கோயில் மூடப்படும் நிலையில், பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25 ஆம் தேதி மூடப்படுகிறது. இப்பகுதிகளில் அதிக பனிப்பொழிவு இருக்கும் காரணத்தினால் வருட இறுதி மாதங்களில் கோயில் மூடப்படுவது வழக்கமாக உள்ளது.