விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடை: பயணிகளின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை
விமானப் பயணங்களின்போது பவர் பேங்க் போன்ற சார்ஜர் சாதனங்களை பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தடை விதித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விமானப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. அதன் கீழ் இந்த புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானப் பயணிகள் இனி பவர் பேங்குகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதில், விமான இருக்கையின் அருகேயுள்ள மின் பிளக்குகளில் பவர் பேங்கை சொருகி மொபைல்போன், லேப் டாப்பை சார்ஜ் செய்வதும் அடக்கம். பவர் பேங்க்குகள் மற்றும் அதுபோன்ற லித்தியம் பேட்டரிகளை கைப்பைகளில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
அதனை மேல்பக்க கம்பார்ட்மன்ட்களில் வைக்கக் கூடாது என்று விதிமுறைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிறுவனங்கள் ஏற்கெனவே இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, விமானப் பயணிகள் இனி கையடக்க சார்ஜர்களை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் விமானப் பயணத்தின்போது அவற்றை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், விமானப் பயணத்தின்போது தொலைபேசிகள், டேப்லெட்டுகள் அல்லது வேறு எந்த கருவிகளையும் சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை பயன்படுத்த முடியாது என்பதாகும்.
மேலும், இந்த சாதனங்களை சார்ஜ் செய்ய அல்லது இயக்குவதற்கு விமான இருக்கையின் அருகே மின் பிளக்குகளை பயன்படுத்துவதற்கும் இந்த விதி பொருந்தும். இந்த புதிய விதிமுறை மூலம் விமானப் பயணிகள் இனி தங்களது பயணத்துக்கு முன்பாக மொபைல்போன், லேப் டாப்களில் தேவையான அளவு சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.