டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

டெல்லி குண்டுவெடிப்பில் பாதித்து சிகிச்சை பெறுவோருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (LNJP) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, டெல்லியில் தரையிறங்கிய உடன் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, எல்என்ஜேபி மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர் பிரதான நுழைவாயிலில் ஊடகங்களைத் தவிர்த்து, பிரத்யேக பின்புற வாயில் வழியாக மருத்துவமனைக்குள் சென்றார்.

டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இந்த குண்டுவெடிப்பில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகின்​றனர்.

சாலையில் வெடித்துச் சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

முன்னதாக நேற்று பூடானின் திம்புவில் பேசிய பிரதமர் மோடி, “டெல்​லி​யில் நடை​பெற்ற கொடூர​மான சம்பவம் அனை​வரை​யும் மிக​வும் துயரத்​தில் ஆழ்த்தி உள்​ளது. இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்தி வரும் அமைப்​பு​கள் இந்த சதி​யின் அடித்​தளத்தை கண்​டு​பிடிக்​கும். இதற்குப் பின்​னால் இருக்​கும் சதி​காரர்களை தப்ப விட​மாட்​டோம். அவர்​கள் அனை​வரும் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள்” இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.