‘இடமோ; வலமோ... வளர்ச்சி தான் உங்களை காப்பாற்றும்’ - ஆளும் மாநில கட்சிகளுக்கு பிரதமர் அறிவுரை!
மாநில அரசுகள் எந்த கொள்கையில் இருந்தாலும், அம்மாநிலத்தின் வளர்ச்சியே அவர்கள் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை பீகார் தேர்தல் உணர்த்தி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பத்திரிகையாளர் ராம்நாத் கோயங்காவை சிறப்பிக்கும் விதமாக ‘ராம்நாத் கோயங்கா உரை’ என்ற தலைப்பில் விழா நடத்தப்படுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வரும் இந்த விழாவில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி போன்ற பெரிய ஆளுமைகள் சிறப்புரையாற்றி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஆறாவது ‘ராம்நாத் கோயங்கா உரை’ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக, அவருக்கு ‘ராம்நாத் கோயங்கா உரை’ நிகழ்வுக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் ஆற்றிய சிறப்புரையில், “நக்சலிசத்தை ஆதரிக்கும் சக்திகள் நாட்டில் வலுவிழந்து வருகின்றன. கடந்த ஐந்து தசாப்தங்களாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்று இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருந்தது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் வேரூன்றிய நகர்ப்புற நக்சல் அமைப்பு, இப்போது முஸ்லிம்லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் ஆக மாறியுள்ளது. தற்போது இந்த முஸ்லீம்லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக தேசிய நலனை சூறையாட பார்க்கிறது,” என்று காங்கிரஸ் கட்சியை தன் உரையில் கடுமையாக விமர்சித்து பேசினார்.
மேலும், மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, முதன்மை கவனம் வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். அவர்கள் எந்த கோட்பாடுகளை கடைபிடித்தாலும், மாநில வளர்ச்சி தான் அவர்களின் கட்சிகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கும் என்பதையும் குறிப்பிட்டு கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் ஆரோக்கியமான போட்டியை தான் வரவேற்பதாகக் கூறிய மோடி, பீகார் தேர்தல் தொடர்பான சில கருத்துகளையும் முன்வைத்து பேசினார்.
அப்போது, “பீகார் தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் உயர்ந்த எண்ணங்களை பிரதிபலித்துள்ளன. இன்று இந்திய மக்கள் நல்ல நோக்கங்களைக் கொண்ட, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் அரசியல் கட்சிகளை நம்புகிறார்கள்.
பீகார் மக்கள் ஆர்ஜேடி அரசுக்கு 15 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தனர். அந்த நேரத்தில் லாலு பிரசாத் யாதவ் மாநிலத்திற்கு நிறைய செய்திருக்க முடியும். ஆனால் அவர் ‘காட்டு ராஜ்ஜியத்தை’ தேர்ந்தெடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்தார்.
நடந்துமுடிந்த பீகார் தேர்தலில் மக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை, பீகார் அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வாக்குப்பதிவைப் பெற்றுள்ளது. ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு கிட்டத்தட்ட ஒன்பது விழுக்காடு அதிகமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி,” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.