வேர்ல்ட் டூர் பைனல்ஸ் 2025: அரையிறுதிக்கு முன்னேறி சாத்விக்-சிராக் ஜோடி சாதனை

வேர்ல்ட் டூர் பைனல்ஸ் 2025: அரையிறுதிக்கு முன்னேறி சாத்விக்-சிராக் ஜோடி சாதனை

வேர்ல்ட் டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜொடி என்ற சாதனையையும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் படைத்துள்ளனர்.

வேர்ல்ட் டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரானது சீனாவில் உள்ள ஹாங்ஸு நகரில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருக்கும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரானது, ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. இந்த தொடரின் இதில் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளன.

இந்த தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையின் மூன்றாம் நிலையில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி இணை பங்கேற்றுள்ளனர். இந்த தொடரின் முதல் சுற்றில் சீன இணையை 12-21, 22-20, 21-14 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றில் இந்தோநேசிய இணையை 21-11, 16-21, 21 -11 என்ற கணக்கிலும் வீழ்த்தி, மூன்றாம் சுற்று ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடியை எதிர்த்து ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை மலேசிய இணை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய ஜோடிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் இந்திய இணை சிறப்பாக செயல்பட்டனர்.

முதல் செட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய இணை, மூன்றாவது செட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 21-15 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி 17-21, 21-18, 21-15 என்ற கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதன் மூலம் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜொடி என்ற சாதனையையும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் படைத்துள்ளனர். இதனையடுது இன்று நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் வாங் சாங்-லியாங் வீகெங் இணையை எதிர்த்து சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி இணை பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.