"2026 தேர்தலில் 3 மடங்கு வெறியோடு களத்தில் நிற்போம்" - சீமான் ஆவேசம்!

"2026 தேர்தலில் 3 மடங்கு வெறியோடு களத்தில் நிற்போம்" - சீமான் ஆவேசம்!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று மடங்கு வெறியோடு களத்தில் நிற்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடு, மரங்கள் மற்றும் மலைகள் மாநாட்டை தொடர்ந்து, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை கூத்தன்குழியில் ‘கடலம்மா மாநாட்டை’ நடத்தினார். இதில், கடல் மாசு, நெகிழி குப்பைகளால் கடலுக்கு ஏற்படும் கேடுகள், மீனவர்கள் பிரச்சினைகள், அனு உலையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து காணொளி வெளியிடப்பட்டது.

இதன் பின்னர் மாநாட்டில் பேசிய சீமான், “தேர்தலில் யாருடன் கூட்டணி என அனைவரும் பேசி வரும் நிலையில், கடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நாதக மட்டுமே பேசி வருகிறது. நாட்டுக்காக இருப்பவர்கள் மட்டுமே இது போன்ற அரசியலை முன்னெடுப்பார்கள். மரம், மழை, தண்ணீருக்கு ஓட்டு இல்லை என்றாலும், அவற்றுக்கு உயிர் இருக்கிறது. கடலம்மா மாநாடு என்பது அறிவு சார்ந்த ஒரு பயணம்.

பருவநிலை மாறி விட்டது என எல்லோரும் பேசி வருகிறார்கள். பருவ மழை மாறவில்லை, அதனை நாம் தான் மாத்தி இருக்கிறோம். 81 சதவீதம் நிலக்கரி, மீத்தேன், ஈத்தேன் தமிழகத்தில் தான் உள்ளது. இதனை வேட்டையாட அனைத்து முதலாளிகளும் தமிழகத்தில் களமிறங்கி வருகிறார்கள். கடலில் 12,500 கோடி கிலோ நெகிழி குப்பைகள் கலந்திருப்பதாக கணக்கீடுகள் கூறுகின்றன. இந்தியாவில் மட்டும் தான் கடலில் எண்ணெய் கொட்டினால் அதனை வாளி கொண்டு எடுக்கும் சூழல் தான் தற்போதும் உள்ளது.

தமிழகத்தில் புதிய துறைமுகங்கள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. காட்டுப்பள்ளியில் புதிய துறைமுகம் அமைக்க அதானிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களை ஏற்றுமதி செய்ய அவர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் புதிய துறைமுகங்கள் செயல்பட தொடங்கினால் மீனவர்கள் கடல் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இலங்கை கடற்படையால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுடும் போது இந்திய ராணுவம் கண்முடி வேடிக்கை பார்க்கிறது.

சென்னையில் நடந்த வான்வெளி சாகசத்தை கடலில் காட்டியிருந்தால், சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் ஒருவரை கூட சுட்டிருக்க மாட்டார்கள். குரங்கணி தீ விபத்து, ஒக்கி புயல் உயிரிழப்பு சம்பவங்களில் இந்திய ராணுவம் எதுவும் செய்யவில்லை. ஏனெனில், உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழர்கள்.

இனி மீனவர் ஒருவர் உயிரிழந்தால் சர்வதேச பிரச்சனையாக மாற்றப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்று மடங்கு வெறியோடு களத்தில் நிற்போம். இன விடுதலை ஒன்றே குறிக்கோள். இனி ஒவ்வொரு கூட்டத்திலும் காணொளி காட்சி வாயிலாக படம் போட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.