‘ஆசிரியர்களை கைவிட மாட்டோம்..’ முதலமைச்சரிடம் இருந்த வந்த அழைப்பு.. அன்பில் மகேஸ் குட் நியூஸ்

‘ஆசிரியர்களை கைவிட மாட்டோம்..’ முதலமைச்சரிடம் இருந்த வந்த அழைப்பு.. அன்பில் மகேஸ் குட் நியூஸ்

 அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை - சம ஊதியம் என்பதை வலியுறுத்தி 8 ஆவது நாளாக சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககம் வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம், முதன்மை கல்வி அலுவலகம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசுத்தரப்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ஆசிரியர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள். அவர்களை கைவிட மாட்டேன். என்று கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சியில் இருந்து விமானத்தில் வரும்போது கூட, என்ன மகேஸ்.. ஆசிரியர் பிரச்சனைக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார்.

எங்களின் தேர்தல் வாக்குறுதி பற்றியும் எடுத்துரைத்தேன். ஓய்வூதியம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதற்கு முதலமைச்சர் வரசொல்லியுள்ளார். அந்த கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர்கள் பற்றி பேசும்போது நிதித்துறை சில கருத்துகளை என்னிடம் சொல்லியுள்ளனர். அதை தெளிவுபடுத்தும் வகையில் இன்றைக்கு நாங்கள் சில கோரிக்கைகளை வைக்கவுள்ளோம்.

ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் என்னிடம் என்ன அறிவுறுத்துகிறாரோ அதை நிதி குழுவில் சொல்லி நல்ல முடிவு எடுக்கப்படும். நாங்கள் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. பொதுவாக ஊதியக் குழுவில் உயர்வு இருக்கும். பணி நியமனம் தொடர்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் சொன்ன சம்பளம் ஒன்றாகவும், நியமனத்துக்கு பிறகு பெறும் சம்பளம் ஒன்றாகவும் இருக்கும்.

அந்த வித்தியாசத்தை சரி செய்ய சொல்லி கேட்கிறார்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லியுள்ளோம். இது என்துறை சார்ந்த பிரச்சனை. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் அதற்கு நல்ல விடிவை கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. பொறுமையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துவோர் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். பேசி தீர்வு காணப்படும். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகத்தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எந்தளவுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் படித்தவர்கள். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். போராடும் ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். ஆசிரியர்களை கைவிட மாட்டோம்" என்றார்.