தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை: சவரன் ரூ.91,680க்கு விற்பனை!

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை: சவரன் ரூ.91,680க்கு விற்பனை!

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 92 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஆட்டம் காட்டி வருகிறது. அதிலும் ஒரே நாளில் இரண்டு முறை என முன்பு விறுவிறுவென ஏறி வந்த தங்கம் விலையானது, தீபாவளியைத் தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், நேற்று (நவ.20) ஆபரண தங்கம் கிராம் ரூ.11,500-க்கும், சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.91,680க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் கட்டித் தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.1,00,368க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.352 குறைந்து ரூ.1,00,016க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 கிராம் - ரூ.11,460

ஆபரணத் தங்கம் (22 காரட்) 1 சவரன் - ரூ.91,680

வெள்ளி 1 கிராம் - ரூ.169

வெள்ளி 1 கிலோ - ரூ.1,69,000

கடந்த 10 நாட்களுக்கான 22 காரட் தங்கத்தின் விலை

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

பங்குச்சந்தை, சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை, மத்திய வங்கிகளின் கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. இருந்தாலும் இந்த நிலையானது தங்கத்தின் மீது முதலீடு செய்வோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே தங்க முதலீட்டாளர்கள் சந்தை மதிப்பை கருத்தில் கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. குறிப்பாக, இதுவரை உச்ச விலையாக அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை ரூ.97,600க்கு விற்பனையானது. ஆனால், தீபாவளி முடிந்த பிறகு அக்.22ஆம் தேதி முதல் தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.

தற்காலிகமாக தங்கம் விலை குறைந்தாலும், அடுத்தடுத்து விலையேற்றம் கட்டாயம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், முன்பு இந்தியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே தங்கத்தின் மீதான முதலீட்டை பாதுகாப்பானதாக கருதிய நிலையில், தற்போது பல நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை கையில் எடுத்திருக்கின்றன. இதனால் தொடர் விலையேற்றம் இருந்தாலும் தங்கம் விற்பனை குறைந்த பாடில்லை.