'அமித்ஷா 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை..' - செல்வப்பெருந்தகை தடாலடி
அமித்ஷா 100 முறை தமிழகம் வந்தாலும் தமிழக மக்கள் பாஜகவுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ''நம்முடைய ஓபிசி அணி தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். ஏனென்றால் அதிகமான மக்கள்தொகை இருக்கும் ஒரு அணி இந்த ஓபிசி அணி. ஏறக்குறைய 50% இடஒதுக்கீடு இந்தியாவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது.
அந்த அடிப்படையில் மிகச்சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஓபிசி என வாக்கு வங்கிக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி ஒருவர் மட்டும்தான் ஓபிசிக்கான சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றுக்காக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த போராட்டத்தை, உண்மை தன்மையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான் இந்த போராட்டத்தின் வடிவம் முழுமை பெறும்'' என்றார்.
கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சி அங்கம் கொண்டுள்ள திமுக அரசு இந்த தேர்தலில் வெற்றி பெறும். அரசில் காங்கிரஸ் அங்கம் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமில்லாமல் இங்கு இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் விருப்பமும் ஆகும்'' என்றார்.
இதன் பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும், தமிழகம் பாஜகவிற்கான மண் கிடையாது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கான மண் இல்லை. 100 முறை வந்தாலும் இந்த மண் பாஜகவிற்கான மண் இல்லை. தமிழக மக்கள் பாஜகவிற்கு இடம் கொடுக்கமாட்டார்கள்.
இன்னும் ஒரிரு நாட்களில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர இருக்கும் தேதிகள் அறிவிக்கப்படும். எந்த கருத்து கணிப்பாக இருந்தாலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருக்கும்'' என்றார்.