ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு ஒரு போதும் கைவிடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
ஆசிரியர்களை ஒரு போதும் திராவிட மாடல் அரசு கைவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வி உரிமைச் சட்டம் 2009, அமலுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் இது முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத தகுதி நிபந்தனையாக மாறியுள்ளது.
இதனையடுத்து சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் சார்பான 35 சங்கங்களும், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக 20 சங்கங்கள் என 55-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளி ஆசிரியர்களின் நலன் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேசினார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்தார். 2011 ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனு குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சரிடம் தெரிவித்து எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை பெற்றார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார்” என கூறப்பட்டுள்ளது.