தமிழ்நாட்டில் பாஜகவின் மத அரசியல் எடுபடாது - தயாநிதி மாறன் விளாசல்
எப்படியாவது தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டிவிட வேண்டுமென பாஜக துடிப்பதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.
தமிழக துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (டிச.30) இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “இந்தியாவின் பல மாநிலங்களில் இந்து-முஸ்லீம் மக்களுக்கிடையே பிரிவினையைத் தூண்டி, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தற்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் அதே தந்திரத்தை தான் பாஜக கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது மதக் கலவரத்தை தூண்டிவிட வேண்டும் என பாஜக துடிக்கிறது. ஆனால், நம் மக்கள் படித்தவர்கள், சுயசிந்தனை உடையவர்கள் என்பதால் இத்தகைய சதி வேலைகள் ஒருபோதும் நிறைவேறாது. பாஜகவின் மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது.
அதேபோல, நாடாளுமன்றத்தில் ‘காவி’ கூட்டத்தினர் தங்கள் கருத்துக்களைத் திணிக்க முயலும்போதெல்லாம், அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறோம். மேலும், தமிழக விளையாட்டுத் துறைக்கு என தனி முத்திரையைப் பதித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளால், 2026-ல் மீண்டும் திமுகவே ஆட்சியை பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.