அரசியல் பேச வேண்டாம்! ஒதுங்கிய எல்.முருகன்! ஏன் தெரியுமா?

அரசியல் பேச வேண்டாம்! ஒதுங்கிய எல்.முருகன்! ஏன் தெரியுமா?

 ‘பராசக்தி’ திரைப்படம் குறித்த கேள்வியை, இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தவிர்த்தார்.

மத்திய அரசின் 'கேலோ இந்தியா' (Khelo India) திட்டத்தின் கீழ் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் நடைபெற்றன. அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளை விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் விதமாக, ‘மத்திய அரசின் 2025 விளையாட்டு திருவிழா’ மேட்டுப்பாளையம், ஊட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, இன்று (டிச.25) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களிடம் உரையாற்றினார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது 11ஆம் வகுப்பு மாணவி நேஷிக்காவிடம் பேசிய மோடி, விளையாட்டு பயிற்சி, கல்வி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். அதற்கு பதிலளித்த மாணவி, “எனது விளையாட்டு பயிற்சியால் கல்வி ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி செய்கிறேன். போலோ விளையாட்டை விட கபடியைத்தான் நான் முதலில் தேர்வு செய்வேன். அது எனது மாநில விளையாட்டு என்பதே முக்கிய காரணம். எங்கள் ஊரில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நன்றி. இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும்” என்றார். பிறகு ‘வணக்கம்’ என்று கூறிய பிரதமர் மாணவியுடனான பேச்சை நிறைவு செய்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “இந்தியா முழுவதும் நடந்த ’விளையாட்டு திருவிழா’ இன்று வெற்றிகரமாக முடிந்தது. இதில், காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

தற்போது இந்தியா தலைசிறந்த வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 2030-ல் காமன்வெல்த் மற்றும் 2036-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு தயாராக வேண்டும் என்பதற்காக இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், இந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச அளவில் கொண்டு செல்வதே நமது நோக்கம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் தணிக்கை குழு குறித்த கேள்விக்கு, “அரசியல் கேள்விகளுக்கு இப்போது பதில் இல்லை. அற்புதமான நிகழ்வு இதை செய்தியாகப் போடுங்கள்” எனக் கூறிவிட்டு சென்றார்.