"காடுகளில் நமக்கு பாதுகாப்பில்லை; நம் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவோம்" - 170 பேருடன் சரணடைந்த மாவோ தலைவர்

"காடுகளில் நமக்கு பாதுகாப்பில்லை; நம் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவோம்" - 170 பேருடன் சரணடைந்த மாவோ தலைவர்

மாவோயிஸ்ட் போராளிக் குழுவின் முக்கிய தலைமை உறுப்பினரான அஷன்னா எனும் ரூபேஷ், சத்தீஸ்கர் அரசிடம் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.

அஷன்னாவுடன் 170 மாவோயிஸ்ட் போராளிகள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடமாட்டத்தை குறைக்க பாடுபட்ட பாதுகாப்புப் படை வீரர்களின் தீவிர முயற்சியை, அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பாராட்டியுள்ளார். மேலும், நக்சல்கள் சரணடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் தங்களிடம் இருந்த ஏகே-47, இன்சாஸ் ரைபிள்கள், எஸ்.எல்.ஆர் மற்றும் 303 துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பஸ்தாரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்திருக்கின்றனர். நக்சலைட்டுகளை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த இடைவிடாத முயற்சிகளே இதற்கு காரணம்.

2024-ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மொத்தம் 2,100 நக்சலைட்டுகள் இதுவரை சரணடைந்துள்ளனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் அரசு செயல்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைவதற்கு முன்னதாக பேசிய அஷன்னா, “கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் தோழர்களில் சிலர் இன்னும் போராட விரும்புகிறார்கள். ஆனால் முதலில் நம் பாதுகாப்பை கருத்தில் கொள்ளுமாறு நான் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இனிமேல் காடுகள் நம்மை எப்போதும் பாதுகாக்காது. மற்ற மாநிலங்களில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு சரணடைய கூறுங்கள். நம் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மாவோயிஸ்ட் போராளி குழுவின் மூன்று முக்கிய நிர்வாகிகள், ஐந்து மண்டலக் குழு உறுப்பினர்கள், 20 செயற்பாட்டாளர்கள் உள்பட 169 பேர் தற்போது அஷன்னாவுடன் சரணடைந்துள்ளனர். அவர்கள் வசம் இருந்த 70 கிலோ ஆயுதங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.