“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” - மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு

“தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை!” - மகளிர் காங். தலைவர் ஹசீனா சையத் கொதிப்பு

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களின் கூட்டணி தலைமையான திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸில் மகளிருக்கு மரியாதை இல்லை என்றொரு குண்டைத் தூக்கி வீசி இருக்கிறார் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியிலிருந்து...

தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் ஹசீனாவுக்கும் என்ன திடீர் பிரச்சினை?

தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில் இந்​திரா காந்​தி​யின் நினை​வஞ்​சலி கூட்​டம் அக்​டோபர் 31-ம் தேதி நடை​பெற்​றது. அதற்​கான அழைப்​பிதழில் எனது பெயர் உட்பட மகளிர் காங்​கிரஸார் யார் பெயரும் இடம்​பெற​வில்​லை. இதுகுறித்து கட்சி நிர்​வாகத்​தில் கேட்​டதற்​கு, “நீங்​கள் வேண்​டு​மா​னால் தனி​யாக கூட்​டம் நடத்​திக் கொள்​ளுங்​கள்” என்​ற​னர். அதனால் நான் தனி​யாக நினை​வஞ்​சலி கூட்​டம் நடத்​தினேன்.

தமிழக காங்​கிரஸ் தலைமை என்ன வேலை கொடுத்​தா​லும் நாங்​கள் சிறப்​பாகச் செய்​கி​றோம். வாக்கு திருட்​டுக்கு எதி​ராக 3 லட்​சம் கையெழுத்​துகளை வாங்​கிக் கொடுத்​திருக்​கி​றோம். திருநெல்​வேலி மாநாட்​டுக்கு 5 ஆயிரம் பேரை அழைத்து வரச் சொன்​னார்​கள். நாங்​கள் 7 ஆயிரம் பேரை அழைத்​துச் சென்​றோம்.

இத்​தனை சிறப்​பாக நாங்​கள் செயல்​பட்​டாலும் தமிழ்​நாடு காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் உள்ள சிலர் பெண்​களுக்கு முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தில்​லை. மேடை​யில் மகளிர் காங்​கிரஸூக்கு இருக்கை கூட ஒதுக்​கு​வ​தில்​லை. திருநெல்​வேலி மாநாட்​டில்​கூட எனக்கு மேடை​யில் இடமில்​லை. இதுபற்றி தலை​மைக்​கும், மேலிட பொறுப்​பாள​ருக்​கும் தெரி​வித்​தும் எந்த நடவடிக்​கை​யும் இல்​லை.

காங்கிரஸிலிருந்து விலகிய விஜயதரணி சொன்னது போல் தமிழ்நாடு காங்கிரஸில் மகளிருக்கு முக்கியத்துவ தரப்படுவதில்லை என்கிறீர்களா?

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்திரா காந்தி மகளிர் காங்கிரஸை தோற்றுவித்தார். குஷ்பு, விஜயதரணி போன்றவர்கள் எல்லாம் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர். நான் இன்னும் வார்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. அவர்கள் பிரச்சினையும், என் பிரச்சினையும் ஒன்று இல்லை. சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் திராவிட கட்சிகளை நோக்கி சென்றிருப்போம். கட்சி, கொள்கை, கோட்பாடுக்காக தான் நாங்கள் காங்கிரஸில் இருக்கிறோம். ஆனால் இங்கு மகளிருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை.

மகளிர் காங்கிரஸுக்கு புது ரத்தம் பாய்ச்ச திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

மகளிர் காங்கிரஸில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என படித்தவர்கள் மாவட்ட தலைவிகளாக உள்ளனர். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட தலைவியாக உள்ளனர். அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். வரும் நவம்பர் 14-ல் அவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சியும் வழங்க இருக்கிறோம். அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்க இருக்கிறோம்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் மகளிரணிக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுப்பீர்களா?

மகளிருகு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது காங்கிரஸின் கொள்கை மற்றும் கோட்பாடு. அதனால் தமிழக காங்கிரஸில் 2026 தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை பெற்றே தீருவேன். வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அகில இந்திய தலைமையை வலியுறுத்துவேன்.

தமிழகத்தில் ஒரு பக்கம் காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது... இன்னொரு பக்கம் பாஜக வளர்ந்து கொண்டே வருகிறதே..?

அரசியலில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கடந்த தேர்தலில் வாங்கிய இடங்களை விட அதிக இடங்களை வாங்க இந்த தேர்தலில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் தலைமை எடுக்கும். 4 எம்எல்ஏ-க்களை பெற்றுள்ள பாஜக தமிழகத்துக்கு என்ன செய்துவிட்டார்கள்? பாஜக தேசிய மகளிர் அணி தலைவியாக இருக்கும் வானதி சீனிவாசன் தமிழகத்தில் பெண்கள் பிரச்சினைகளுக்காக போராடியதுண்டா?

2026 தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் எந்தக் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கிறீர்கள்?

நிச்சயமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். தமிழக மக்கள் மதவாதத்தை எதிர்ப்பவர்கள். சகோதரத்துவத்தை விரும்புபவர்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் இது நாள் வரை அதிமுகவை ஆதரித்த சிறுபான்மையினர் கூட இம்முறை திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பார்கள்.

திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி காங்கிரஸை உரிய மரியாதையுடன் நடத்துவதாக நினைக்கிறீர்கள்?

திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸாருக்கு உரிய மரியாதை அளிக்கிறார். ஆனால், கீழ்மட்டத்தில் அப்படி இல்லை. எனக்கு நேரடி அனுபவங்கள் இல்லை என்றாலும் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு கீழ் மட்டத்தில் உள்ள திமுகவினர் உரிய மரியாதை அளிக்கவில்லை என்கின்றனர். இதற்கு அதிமுகவினர் எவ்வளவோ பரவாயில்லை என்றும் கருத்துகளை பகிர்கிறார்கள்.

திராவிட மாடல் அரசு குறித்து காங்கிரஸ்காரராக உங்களின் மதிப்பீடு என்ன?

தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. எங்கள் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினும் சகோதர மனப்பான்மையுடன் பழகி வருகின்றனர். திமுக அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது.