''சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - கொளத்தூர் மணி

''சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - கொளத்தூர் மணி

சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டார்.

சாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் கொளத்தூர் மணி உட்பட பல்வேறு முற்போக்கு இயக்கங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாதிய தீண்டாமைக்கு எதிராக பல்வேறு பதாகைகள் மற்றும் ஓவியங்களை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''சாதியவாதிகளும் சாதிய சங்கத்தினரும் சமுதாயத்தை பின் நோக்கி இழுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சாதியை ஒழிக்கவும், உரிமையை மீட்டெடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை முன்னேறுவதற்காகவும் சாதி சங்கங்கள் இருந்த நிலையில், தற்போது கள்ளச் சாராயம் விற்பவர்கள், கந்து வட்டிக்காரர்கள் கல்லூரி நடத்தி சாதி சங்கங்களை துவங்கி வருகிறார்கள்.

இவர்கள் சாதியத்தை கூர்மைப்படுத்தி மீண்டும் சாதிகளை வளர்க்க தான் முயற்சிக்கிறார்கள். பார்ப்பனியம் செய்த அதே கொடுமைகளை தான் சாதி சங்கம் என்ற பெயரில் இவர்களும் மீண்டும் செய்கின்றனர். மதசார்பற்ற நாடு என்ற போதிலும், சமீப காலமாக பல்வேறு சந்தேகங்கள் எழும் அளவிற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி வருகின்றனர்.

தற்போது ஊருக்குள் பேருந்துகள் செல்லாத தீண்டாமை கூட வந்து விட்டது. இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் சமூகத்தின் பணியை செய்வதற்கு மறுக்கிறார்கள். இரட்டைக் குவளை முறை குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது வழக்குப்பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. தற்போதுள்ள அரசு பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், இந்த விஷயத்தில் கவனம் செலுத்த மறுக்கிறது'' என தெரிவித்தார்.