செங்கோட்டையன் கருத்துக்களை தவெகவினர் ஏற்பார்களா? - எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
செங்கோட்டையனின் கருத்துக்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அருணா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஒரு சில துறைகளில் நன்றாக நடைபெற்று வருகிறது. தொய்வாக நடக்கும் துறைகளில் என்னென்ன குறைகள் உள்ளது, பணிகள் வேகப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சில திட்டங்களில் மத்திய அரசு போதிய நிதியே தரவில்லை. குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் நிதி மத்திய அரசு இன்னமும் வழங்காமல் இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
எந்த விவசாயம் செய்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்பது குறித்து அறிவதற்காக தான் மண் பரிசோதனை என்று செய்யப்படுகிறது. ஆனால் மண் பரிசோதனை செய்வதில் முடிவுகள் வருவதில் காலதாமதம் ஏற்படுவதாலும், சரியாக பரிசோதனை செய்யப்படாததாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்” என்றார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ”செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றதால் எந்த விதமான மாறுபாடும் ஏற்படாது. அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்துவிடும். ஆனால் அவருக்கு முன் அனுபவம் அதிகம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவருடைய அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய அனுபவம் மூலம் கருத்துக்களை கூறினால், தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் அவர்கள் உள்ளனரா? என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் அதிமுகவில் இருந்து அனுபவம் அதிகமுள்ள செங்கோட்டையன் வெளியேறியது ஒரு மைனஸ் தான்” என்றார்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் பேசுகையில், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைய வேண்டுமென்றால் காவல்துறை தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் ரவுடி லிஸ்டில் இருப்பவர்களை இரண்டு தினங்களுக்கு ஒரு முறை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களது நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் மட்டுமே குற்றங்கள் குறையும்” என்றார்.
எஸ்.ஐ.ஆர் குறித்து பேசுகையில், “எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி இருக்கலாம். தற்போது தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது கால நீட்டிப்பு தர வேண்டும். யாரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடக்கக்கூடாது என்று கூறவில்லை, ஆனால் கால அவகாசத்தோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும். இரட்டை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக தான் உள்ளது” என்றார்.