அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ அருள் ஆவேசம்

அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ அருள் ஆவேசம்

அன்புமணி மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், “குருச்சேத்திர போர் போல் ஒரு தூசுக்கும், இமயமலைக்கும் தற்போது போர் நடைபெற்று வருகிறது. ராமதாஸுடன் மோதுவதற்காக பல சதிகள் செய்து, துரோகங்களை இழைத்து பல கோடி ரூபாயை செலவு செய்து கொண்டிருக்கின்றனர்.

பெற்றவர்களையே மதிக்காத யாருமே தலைவராக இருந்ததில்லை. மிகப் பெரிய இயக்கத்தை உருவாக்கி தலைவராகிய ராமதாஸுக்கு அன்புமணி செய்த துரோகம் ஒன்றா? இரண்டா? நீதிமன்றத்திற்கு நிகரான தேர்தல் ஆணையத்தில் அன்புமணி பொய் சொல்லி இருக்கிறார். 2023-ல் தான் பாமகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்ற தகவலை கொடுத்திருக்கிறார். இது அப்பட்டமான பொய் ஆகும்.

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். நீதிமன்றத்தை அவமதித்து, பொய் செய்தி தெரிவித்த அன்புமணியை சிறையில் அடைக்க வேண்டும்.

போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 46 ஆண்டு காலம் உழைத்து உருவாக்கிய கட்சியை திருடிவிட்டனர். இந்த அநீதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், மாம்பழம் சின்னம் மருத்துவர் ராமதாஸ் உடையது என நீதிமன்றம் விரைவில் சொல்லும்” என கூறினார்.

கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 'தமிழக மக்கள் உரிமை மீட்பு' பயணம் என்ற பேரில் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பாமகவுக்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான 'மாம்பழம்' ஒதுக்க வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து ராமதாஸ் கடிதத்துக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என அறிவித்துள்ளது.