உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த அக்டோபர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்ட நிலையில், அடுத்த 15 மாதங்களுக்கு, அதாவது பிப்ரவரி 9, 2027 வரை அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், சட்டப்பிரிவு 370 நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி சூர்யகாந்த் இடம்பெற்றிருந்தார்.

ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்யகாந்த், தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பிற்கு முன்னேறியுள்ளார். இவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

குருக்‌ஷேத்ரா பல்கலைகழகத்தில் 2011ஆம் ஆண்டு சட்ட முதுகலை பட்டப்படிப்பில் முதல் முதலிடம் பிடித்து சாதித்தார். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 5, 2018இல் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு மே 24இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

சமீபத்தில் மாநில சட்ட மசோதா கையாள்வதில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் இடம்பெற்றிருந்தார். எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின் போது, பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுமாறும் நீதிபதி சூர்யகாந்த் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்கள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதி குழுவில் இடம்பெற்றிருந்தார். 1967ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார். இந்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது, சிறுபான்மை அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தது.