சத்தீஸ்கரில் 110 பெண்கள் உட்பட 210 நக்சலைட்டுகள் சரண்!

சத்தீஸ்கரில் இதுவரை இல்லாத வகையில் 210 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். பெரும்பாலும் இளம் வயதினர் இடம்பெற்றுள்ள நிலையில், 110 பெண்களும், 100 ஆண்களும் இருக்கின்றனர்.
சரண் அடைந்தவர்கள் நக்சலைட்டுகள் பிடியிலுள்ள சத்தீஸ்கரில் வடக்கு பஸ்தரைச் சேர்ந்தவர்கள். இந்த சரணடைததாலால், வடக்கு பஸ்தர் பகுதி சிவப்பு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதன்மூலம், சத்தீஸ்கரில் காவல்துறையினருக்கு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 110 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் உள்ளிட்ட 208 நக்சலைட்டுகள் தமது 153 ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
இந்த இருபாலரில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர். இதுபோல், ஒரே சமயத்தில் நக்சலைட்டுகள் திரளான எண்ணிக்கையில் இதுவரையிலும் சரணடைந்ததில்லை எனக் கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) இன் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் மார்ச் 31, 2026 வரை நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்கானக் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
இதையடுத்து, நக்சல் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரவமாக தொடங்கியது. அதேசமயம், சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிக்க அம்மாநில அரசும் தன் நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு தற்போது பெரும் வெற்றி கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற சரணடைதலில், 19 ஏகே-47 துப்பாக்கிகள், 17 எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 23 இன்ஸாஸ் துப்பாக்கிகள், ஒரு இன்ஸா எல்எம்ஜி, .303 ரக துப்பாக்கிகள் 36 ஆகிய ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நான்கு கார்பைன்கள், 11 பிஜிஎல் லாஞ்சர்கள், 41 பன்னிரண்டு துளை அல்லது ஒற்றை ஷாட் துப்பாக்கிகள் மற்றும் ஒரு பிஸ்டல் உட்பட 153 ஆயுதங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.
ஒரு காலத்தில் இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது பஸ்தரின் மாவோயிஸ்ட் பிரிவு. இந்த திரளான சரணடைதலால், நக்சலைட்டுகள் மேலும் பலவீனப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரணடைந்த மாவோயிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவர்களாக மத்தியக் குழு உறுப்பினரான ரூபேஷ் என்ற சதீஷ், பாஸ்கர் என்ற ராஜ்மான் மண்டாவி, ராணிதா,, ராஜு சலாம், தன்னு வெட்டி என்ற சாந்து மற்றும் ரத்தன் எலாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரது தலைக்கும் மத்திய அரசு ரூ.1 கோடி பரிசு அறிவித்திருந்தது. இந்த முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் தனியாக ஒரு காரில் சரணடைய வந்திறங்கினர். இதர நக்சலைட்டுகள் ஒரு பேருந்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.
அனைவரது கைகளிலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் நகல் இருந்தது. இவர்கள் அனைவரையும் மத்திய, மாநில பாதுகாப்புப் படையினர் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற நக்சல் வேட்டையில் 417 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீவிர நடவடிக்கையால் நக்சலைட்டுகள் இடையே பிரிவினை உருவாகி உள்ளது.
இவர்களில் பலரும் அமைதி பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதில் ஒரு மாத கால அவகாசமும் அரசுக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனினும், சத்தீஸ்கருக்கு சமீபத்தில் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதற்கு அவர், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என மறுத்துவிட்டது நினைவுகூரத்தக்கது.