குடியரசு தின விழாவில் முதல் முறை; விலங்கின அணிவகுப்பு ஏற்பாடு

குடியரசு தின விழாவில் முதல் முறை; விலங்கின அணிவகுப்பு ஏற்பாடு

குடியரசு தின விழாவில், முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சிப் பிரிவில் இடம் பெற்றுள்ள விலங்குகளின் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பில் ஒட்டகங்கள், குதிரைகள், நாய்கள் இடம்பெறுகின்றன.

டில்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முப்படைகளின் அணிவகுப்பும், மாநிலங்கள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. இதில், மாநில அரசுகளின் சாதனைகள், பாரம்பரியங்களை விளக்கும் வகையில், அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படுகின்றன.

வரும் ஜனவரி 26ம் தேதி நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி உட்பட, 9 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 'பசுமை மின் சக்தி' என்ற தலைப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறவுள்ளது. 

முதன்முறையாக இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் இடம் பெற்றுள்ள விலங்குகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில் இரண்டு பாக்ட்ரியன் ரக ஒட்டகங்கள், நான்கு ஜான்ஸ்கர் ரக குதிரைகள், நான்கு வேட்டையாடும் பறவைகள், பத்து இந்திய இன நாய்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ள ஆறு வழக்கமான நாய்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.