ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!

ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் நிருபர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!

6 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தலிபான் அரசு சார்பில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதி இந்தியா வருவது இதுவே முதல் முறை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமிர் கான் முட்டாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முஹம்மது தனது எக்ஸ் பக்கத்தில், “நம் நாட்டில், அதுவும் நம் சொந்த மண்ணில், விதிமுறைகளை வகுக்கவும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை திணிக்கவும் அவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், “இந்திய அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ், தலைநகரின் மையப்பகுதியில், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். அதில் வேண்டுமென்றே பெண் பத்திரிகையாளர்களை தவிர்க்கிறார். இதை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய மூர்க்கத்தனமான புறக்கணிப்பை யார் அங்கீகரித்தது?” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

மற்றொரு பெண் பத்திரிகையாளர், “இந்த கூட்டத்திலிருந்து ஆண் நிருபர்கள் வெளிநடப்பு செய்திருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தபிறகு தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது உலகம் முழுவதும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவில் ஆப்கன் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.