ஒசூரில் அதிகாலை பயங்கரம்: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

ஒசூரில் அதிகாலை பயங்கரம்: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

ஒசூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

விசாரணையில், ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று (அக் 12) அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டபள்ளி வனப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, முன்னே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, பிக்கப் வேன் ஒன்று ஏற்கெனவே விபத்தில் சிக்கியிருந்த கார் மீது மோதியது. அதனை தொடர்ந்து, மற்றொரு கார் பிக்கப்வேன் மீதும், லாரி மற்றும் கார் மீதும் என அடுத்தடுத்து 4 வாகங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில், கார் லாரிக்கும், பிக்கப் வேனுக்கும் இடையில் சிக்கி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில், காரில் பயணித்த 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரக்ளின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து ஒசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த முகிலன் (30) என்பதும், அவர் பெங்களூருவில் UPSC தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த பயணத்தின்போது அவரது நண்பர்கள் உடனிருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரில் ஒருவரின் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரே காரில் பயணித்த 4 இலைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.