”ஜனநாயகன் ரிலீஸ்க்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்! இதுதான் விஷயமாம் !சொல்கிறார் ஹெச்.ராஜா
பாஜகவுக்கும் விஜய்க்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அதேபோல,'ஜனநாயகன்' படத்தை வைத்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்வதாகவும், மத்திய அரசுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழு உறுப்பினர் புகார் அளித்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்சார் போர்டு அப்பீல் செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்துள்ளது தலைமை நீதிபதி அமர்வு. மேலும், ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதனால், பொங்கலுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை. ஜனநாயகன் படம் தொடர்பாக அரசியல் அரங்கிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "ஜனநாயகன் திரைப்பட சர்ச்சையைப் பொறுத்தவரை, திரைப்படத்தில் விதிமுறைகளை மீறிய காட்சிகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய தணிக்கை குழு கூறுவது வழக்கமானது தான்.
ராணுவம் தொடர்பான காட்சிகள் இருந்தால் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. தணிக்கை குழு சுட்டிக்காட்டிய தவறை சரி செய்து அனுப்பினாலே திரைப்படத்துக்கு சான்றிதழ் கிடைத்துவிடும். ஜனநாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்று விவகாரத்தில் அதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜவுக்கும் விஜய்க்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.
திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதுபோன்று ஜனநாயகன் திரைப்பட சான்று விவகாரத்திலும் மேல்முறையீடு செய்ய தணிக்கைத்துறைக்கு வாய்ப்புள்ளது. 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது. அதனால் ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து திமுகவிடமிருந்து கூடுதல் சீட் வாங்க நினைக்கின்றனர்.
தமிழகத்தில் அனுமதி கிடைத்த திரைப்படங்களை கூட திரையிட முடியவில்லை. ஆளுங்கட்சியின் முதல் குடும்பத்தின் தயவின்றி தமிழகத்தில் திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும் அவர்களிடமிருந்து திரையுலகம் விடுவிக்கப்படும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பராசக்தி' தான் எனக்குத் தெரியும். புதிய 'பராசக்தி' யார் என்றே எனக்குத் தெரியாது. இந்தியை எதிர்ப்பவர்கள் முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகள் முன் போராட்டம் நடத்தலாமே? இந்தி எதிர்ப்பு என்பது செத்துப்போன குதிரை. அதை சாட்டையால் அடித்து எழுப்ப நினைப்பது என்பது வீண் வேலை." எனத் தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறம் இருக்க, தேர்தல் காலம் என்பதால், மக்களை திசை திருப்பும் நோக்கில், விஜய்யின்'ஜனநாயகன்' படத்தை வைத்து திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்வதாகவும், மத்திய அரசுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்றும் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டஅறிக்கையில், "பொதுவாக ஒரு திரைப்படத்தை குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தால் மட்டுமே தணிக்கைத் துறையால் 'யுஏ' சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஒரு படத்துக்கு இந்தச் சான்றிதழை வழங்க வேண்டுமெனில், அதில் இடம்பெறும் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்த சில சட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகளுக்கு உட்பட்டு, திரைப்படத்தை ஆய்வு செய்த பின்னரே தணிக்கைத் துறை சான்றிதழ்களை வழங்கும்
'ஜனநாயகன்' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்குவதற்காக, சில குறிப்பிட்ட காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினருக்கு தணிக்கைத் துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அந்த மாற்றங்களை செய்ய படக்குழுவினர் மறுத்து வருவதாகத் தெரிகிறது. இது முழுக்க முழுக்க தணிக்கைத் துறைக்கும் படக்குழுவுக்கும் இடையிலான நடைமுறைச் சிக்கலாகும். இந்த விவகாரத்துக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. திரைப்படத் துறையில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
ஆனால், வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து, மக்களை திசை திருப்புவதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றன. உண்மையை உணர்ந்து நடிகர் விஜய் தரப்பினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயலக்கூடாது. 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" எனத் தெரிவித்துள்ளார்.