தலைமுடியைப் பிடித்து இழுத்து... இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்!

தலைமுடியைப் பிடித்து இழுத்து... இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளில் சில, கடந்த புதன்கிழமை இரவு பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தது. அப்போது அதனை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்கும். அவர்கள் அனைவரையும் இஸ்ரேலிய படையினர் சிறைப்பிடித்தனர்.அவர்களில் ஒரு சிலரை நாடு கடத்தினர். அவர்கள் சனிக்கிழமை துருக்கி வந்தடைந்தனர்.

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் வந்த ஆர்வலர்களில் 36 பேர் துருக்கி நாட்டவராவர். அவர்களுடன் அமெரிக்க, ஐக்கிய அரபு அமீரக, அல்ஜீரிய, மொரோக்கோ, இத்தாலி, குவைத், லிபியா, மலேசியா, மொரிசீயனா, ஸ்விட்சர்லாந்து, டுனிசியா மற்றும் ஜோர்டன் நாட்டைச் சேர்ந்தோர் இருந்தனர் என்று துருக்கி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், நாடுகடத்தப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த சமூகநல செயற்பாட்டாளார் ஹஸ்வானி ஹெல்மி மற்றும் அமெரிக்கரான விண்ட்ஃபீல்ட் பீவர் ஆகியோர் தன்பெர்க் இஸ்ரேலியர்களால் துன்புறுத்தப்படுவதை நேரில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். துருக்கியில் செய்தியாளர்களிடம் இத்தகவலை அவர்கள் பகிர்ந்துள்ளனர். இஸ்ரேலியர்கள் எங்களை மிருகங்களைப் போல் நடத்தினார்கள் என்று ஹஸ்வானி ஹெல்மி கூறினார்.

அதேபோல் எர்சின் கெலிக் என்றொரு சமூக செயற்பாட்டாளரும், கிரட்டாவை இஸ்ரேலிய படைகள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது. அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்துமிடமாறு வற்புறுத்தினர் என்றார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் பொய்க் குற்றச்சாட்டு என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

சிறையில் கிரெட்டா நிலை என்ன? இந்நிலையில் இஸ்ரேல் காவலில் இருக்கும் கிரெட்டா தன்பெர்க் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சிறையில் அவர் சரியான உணவு, தண்ணீர் இல்லானல் சிரமப்படுவதாகவும். மூட்டைப் பூச்சி தொந்தரவால் உடல முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு சிரமப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.