தவெகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக நிர்பந்தம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்

தவெகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக நிர்பந்தம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்

அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை காண்பித்து, கூட்டணிக்கு வர அக்கட்சிக்கு அதிமுக நிர்பந்தம் கொடுக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பு வழங்கககூடிய துறையாக சிறுதொழில்கள் உள்ளது. ஆனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பல்வேறு வரிக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு சிறுதொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தும், வருமானத்தை இழந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அன்னிய மூலதனம் அன்னிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் தொடங்குவது போன்ற தீவிர முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதேவேளையில் பராம்பரியமாக உள்ள தொழில்களை பாதுகாக்க திட்டமிட்ட முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள லாரி, ரிக் மற்றும் கோழிப்பண்ணை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல் விசைத்தறி தொழிலாளர்கள் வார முழுவதும் வேலை என்பதில்லாமல் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வேலை என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக தொழிலாளர்கள் கந்து வட்டி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனை அடைக்க உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கிட்னி திருட்டு தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடைபெற்றாலும் உடல் உறுப்புகளை விற்று தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்ற நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும்.

கடன் தொல்லையில் இருந்து விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்கவும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் உடல் உறுப்புகளை விற்பனை தொடர்பாக சட்டப்படியான, உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

உடல் உறுப்புகளை இழந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் அல்லாதோர் நிலம் வாங்கும் நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் வாழ்வாதரம் இழக்கும் நிலை உள்ளது. அங்கு பல இடங்களில் வன உரிமைக் குழு அமைக்கப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அங்கு பட்டா வழங்க தடைவிதிக்கும் அரசாணை உள்ளது. இந்த அரசாணை தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. இது அநியாயமானது. எந்த விதத்திலும் ஏற்கக்கூடியது இல்லை. இது மலைவாழ் மக்களுக்கு எதிரானது. இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். மேட்டூர் அணை 6 முறை நிரம்பியுள்ளது. அணையின் உபரிநீரை பயன்படுத்தும் வகையில் திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தவெகவுடன் கூட்டணி என்பது போல் அதிமுக தான் கூறுகிறது. இதுதொடர்பாக தவெக தரப்பில் இருந்து யாரும் எதுவும் கூறவில்லை. தவெக எங்களுடன் வந்துவிட்டார்கள் என கொடி உள்பட காண்பிக்கின்றனர். இது தவெகவிற்கு நிர்பந்தம் கொடுப்பது போல் உள்ளது.

ஜாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. சில தலைவர்கள் அவர்களின் ஜாதிப்பெயருடன் தான் தமிழகத்தில் அறியப்படுகின்றனர். அதை விட்டுவிட்டு அடையாளப்படுத்துவதை சிரமத்தை ஏற்படுத்தும். அதிமுக ஆட்சி காலத்திலும் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் மட்டும் தான் நடந்தது போல் எடப்பாடி பேசுகிறார். எது எப்படி இருந்தாலும் விசாரணை முழுமையாக நடைபெற்று அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

திண்டுக்கல் எம்பி ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் எம்எல்ஏ, டெல்லிபாபு, நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, எம்.அசோகன், ந.வேலுசாமி, எஸ்.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.