திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா? எடப்பாடி பழனிசாமி சந்தேகம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என கேள்வி எழுந்துள்ளதாக சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.காளிப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். மாட்டு வண்டியில் வந்திறங்கிய அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, பொங்கல் விழா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வை பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு தொடங்கி வைத்தார். பொங்கல் பொங்கிய பிறகு, விழாவில், வள்ளி கும்மி ஆட்டம், உருமியாட்டம், தெருக்கூத்து, குதிரையாட்டம் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்த அவர், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
அதன்பிறகு விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு உலகமெங்கும் இருக்கிற தமிழ் மக்கள் அனைவரும் தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 65 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருவதால் முன்பெல்லாம் கிராமங்களில் தான் பொங்கல் கொண்டாடுவோம். ஆனால் இப்போது நகரங்களிலும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பலம் பொருந்திய அதிமுக கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்” என்றார்.
மத்திய அரசு குறித்து பேசிய அவர், “ஒரு வலிமையான ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. உலகம் முழுவதும் சிறந்த பிரதமர் என போற்றும் வகையில் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். விரைவில் வெற்றிக்கொடி நாட்டுவோம். இன்றைக்கு அரசு ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த மக்களும் ஆட்சியை புறக்கணிக்கும் நிலை வந்துவிட்டது. அடுத்து வரும் பொங்கலை ஆளும்கட்சியாக இருந்து கொண்டாடுவோம்” என்று பேசினார்.
தொடர்ந்து, “தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. இன்னும் சட்ட ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படவில்லை. திமுகவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கை நழுவி வெளியே போகப் போகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது” என விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், "அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அதிமுக கொண்டு வந்த மேட்டூர் உபரிநீர் திட்டத்தை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஏரிகளில் இன்னும் தண்ணீர் நிரப்பப்படாமல் இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்தும் சரி செய்யப்படும்" எனவும் தெரிவித்தார்.