‘காட்பாடிக்கு நான் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது’ - அமைச்சர் துரைமுருகன் சவால்

‘காட்பாடிக்கு நான் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது’ - அமைச்சர் துரைமுருகன் சவால்

கடந்த 50 ஆண்டுகளில் காட்பாடி தொகுதிக்கு நான் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாவல் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள செங்குட்டை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 80 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் விழா மேடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “நான் கடந்த 50 ஆண்டுகளாக காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஒரு காலத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடியது. அப்போது, எனக்கு வாக்களித்தால் குடிநீர் கொண்டு வருவேன் என வாக்குறுதி அளித்தேன். இரண்டே வருடத்தில் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொடுத்தோம். அது காலப்போக்கில் உப்பானதால், குடிக்க முடியாது நிலை ஏற்பட்டது.

தண்ணீருக்காக கஷ்டப்பட்ட நிலையை மாற்றவே திமுக ஆட்சியில் ‘ஒக்கேனக்கல் குடிநீர் திட்டம்’ மூலம் தரமான குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தேன். ஒருகாலத்தில் பாலாற்று தண்ணீரை குடித்த மக்கள், இன்றைக்கு மேட்டூரில் இருந்து வரும் காவிரி தண்ணீரை குடிக்கிறார்கள் என்றால், அதுவும் என்னுடைய சாதனைதான். நான் காட்பாடிக்காக செய்ததை, வேறு எந்த தொகுதிக்காக யாராவது செய்திருந்தால் கூறுங்கள். அதை யாரும் செய்து காட்ட முடியாது என நான் சவால் விடுகிறேன்” என்றார்.

மேலும், “காட்பாடி தொகுதிக்கு பள்ளிகள், நீதிமன்றம், சட்டக்கல்லூரி, காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மக்கள் சுதந்தரமாக ஓய்வு நேரத்தை கழிக்க வசதியாக, காட்பாடி கழுஞ்சூர் ஏரியை சுற்றுலாத் தளமாக மாற்றும் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறோம். அதில் படகு விடப்போகிறேன், நீங்கள் ஜாலியா படகு சவாரி செல்லுங்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், “எனக்கே இப்போது தண்ணீர் பிரச்சனை வந்துவிட்டது!” என பேசியது நிகழ்வை கலகலப்பாக மாற்றியது.