அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் டிடிவி தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் டிடிவி தினகரன்: திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா இறந்தபோது ஸ்டாலினுடன் சேர்ந்து அதிமுகவை ஆட்சியில் இருந்து கவிழ்க்க திட்டம் தீட்டியவர் தினகரன் என திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், "அதிமுக ஒரு ஆலமரம். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் என அனைவரையும் வளர்த்துவிட்டது அதிமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு 18 எம்எல்ஏக்களை தனியாக எடுத்துக்கொண்டு சென்று மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் தினகரன். லண்டனில் ஹோட்டல் வைத்திருப்பதாக தினகரன் மீது வழக்கு உள்ளது. ஏற்கனவே அவர் சிறைக்கு சென்று வந்துள்ளார்.

ஓபிஎஸ் சாதாரண ஆள் அல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போடி தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜானகி அம்மாளுக்கு எதிராக களம் இறங்கியபோது அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நின்ற வெண்ணிலாடை நிர்மலாவுக்கு ஏஜென்டாக செயல்பட்டவர் ஓபிஎஸ். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக மீது ஓபிஎஸ் பல்வேறு வழக்குகளை போட்டுள்ளார். ஆனால் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி சின்னம், கொடி சொந்தம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஓபிஎஸ் போடாத நாடகம் இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை.

செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இணைந்து விட்டனர். இனி இந்தியாவையே அழித்து விடுவார்கள் என செய்திகள் வெளியாகும். ஆனால், அதுபோல ஒன்றும் நடக்காது. இவர்கள் கட்சியின் ரத்தத்தை உறிந்து சென்று தற்போது கட்சிக்கே துரோகம் செய்கின்றனர். செங்கோட்டையன் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் நமக்கு மரியாதை. தேவர் ஜெயந்தி விழாவில் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மூத்தவரான செங்கோட்டையினை நடுவில் வைத்து இடிக்கின்றனர். முதல் நாளே இந்த கதி. எம்ஜிஆர் பெயரை வைத்து ஏமாற்றலாம் என செங்கோட்டையன் மற்றும் மற்றவர்கள் நினைக்கிறார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள்.

அதிமுக கட்சியை அழிப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்கள் தீட்டி வருகிறார். யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” என்றார்.