டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பிரதான இடமாக உள்ள செங்கோட்டையின் நுழைவு வாயில் ஒன்றின் அருகே நகர்ந்து சென்ற கார் வெடித்து சிதறியதில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக ஒரு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் செங்கோட்டை அருகே கூட்ட நெரிசலின் காரணமாக கார்கள் மெதுவாக நகர்ந்து செல்வதும், அதற்கு மத்தியில் வந்துகொண்டிருந்த அந்த கார் திடீரென வெடித்து சிதறுவதும் பதிவாகி இருக்கிறது. சரியாக, நவம்பர் 10-ஆம் தேதி மாலை 6:50 மணி 58 நொடி என்ற கால அளவில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செங்கோட்டையின் செளக் பகுதியை நோக்கி வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, இந்த காரை மருத்துவர் உமர் நபி ஓட்டி வந்ததும், அவர் ஜம்மூ காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் என்பதையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 10ஆம் தேதி காலை பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்வினையாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.