சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று பாய்கிறது: 25 மணி நேர கவுன்ட்-டவுன் தொடக்கம்
எல்விஎம்3-எம் 5 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட்-டவுன்நேற்று தொடங்கியது.
நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் கடந்த 2013-ம் ஆண்டில் செலுத்தப்பட்ட ஜிசாட்-7 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அதற்கு மாற்றாக, எல்விஎம்3 -எம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 (ஜிசாட்- 7ஆர்) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று அனுப்புகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.1,600 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த தகவல் தொடர்புசெயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைக்கோள் குறைந்தபட்சம் 170 கி.மீ தூரம், அதிகபட்சம் 29,970 கி.மீ தொலைவு கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 3.56 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி இறுதிகட்ட பணிகளில்இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் தயாராகியுள்ள இந்த செயற்கைக்கோள் இந்திய கடற்படை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தின் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.