பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது
கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியது மற்றும் அதில் இருந்த மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு, முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸார் மதுராந்தகத்தில் கூடி தீப்பந்தம் ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி அணி தலைவர் ரஞ்சன்குமாரை போலீஸார் நேற்று முன்தினம் வீட்டு காவலில் வைத்தனர். இந்நிலையில், அவர் தனது வீட்டு மாடியில் மோடியே, திரும்பி செல் என்ற வாசகம் இடம்பெற்ற பலூனை பறக்கவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு தலைமையில் பெரியமேடு பகுதியில் கருப்பு உடை அணிந்து, கருப்பு கொடி ஏந்தி, கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், பர்கிட் சாலை பெரியார் சிலை அருகிலும் கருப்பு கொடி காட்டிய காங்கிரஸார், டில்லி பாபுவின் வட சென்னையில் உள்ள அலுவலகம் முன்பு கருப்பு கொடியுடன் கூடிய காங்கிரஸாரை போலீஸார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.