தமிழகத்தை உலுக்கிய கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்!
கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்று நள்ளிரவு ஆண் நண்பருடன் காரில் அமர்ந்திருந்த இளம் பெண், மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் இருந்து இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
திமுக கூட்டணி கட்சிகள்:
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)
கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் குற்றங்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் காவல்துறையினர் போதிய கண்காணிப்பும், விழிப்புணர்வும் இல்லாததால் இத்தகைய கொடுமை நடைபெற்று வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்ய 7 தனிப்படைகளை காவல்துறை அமைத்திருக்கிறது. பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
மேலும் குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இளைஞர்களிடையே காவல்துறையினர் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு, மகளிருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும். இனி எவரும் சுலபமாக இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறையினருக்கு உரிய ஆணைகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ (மதிமுக)
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியையும் தாங்கொணாத் துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் தனிப்படை மூலம் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்ற தகவல் வந்துள்ளது. உடனடியாக அவர்களை கண்டுபிடித்து தக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுப்பழக்கமும் போதைக் கலாச்சாரமும் இத்தகைய கொடூரங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இதிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது என்பதை கோவையில் நடந்துள்ள கொடூர நிகழ்வு உணர்த்துகிறது.
சண்முகம் (சிபிஎம்)
இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
இந்த கொடிய குற்றத்தை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த கவலையளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்:
இபிஎஸ் (அதிமுக)
தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.
அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது. விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்
நயினார் நாகேந்திரன் (பாஜக)
போதைக்கு இரண்டாவது தலை நகரமாக கோவை உள்ளது. பெண்களுக்கு இரவில் நடமாட பாதுகாப்பு இல்லை. இன்று மாலை கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை தமிழ்நாடு முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பெண்களை பெற்றோர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுப்பது சரியா? காவல்துறை நடவடிக்கை ஏற்புடையது இல்லை. நாகரிகரமான ஊர் என கோவையை சொல்லும்போது இப்படி நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆககூடாது. பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
விஜய் (டிவிகே)
கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா?
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது? கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.